வரி குறைந்ததால் விலை குறைந்த சமையல் எண்ணெய்..! தமிழ்நாட்டில் தற்போதைய விலை நிலவரம் இதுதான்!!
மத்திய அரசு சமையல் எண்ணெய்கள் மீதான வரியை குறைத்துள்ளதன் மூலமாக, தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய்கள் ரூபாய் 10 வரை விலை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் விலையை பல தரப்பினரும் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெட்ரோல் விலையை ரூபாய் 5 குறைத்தும், டீசல் மீதான வரியை ரூபாய் 10 குறைத்தும் மத்திய அரசு தீபாவளியன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், நேற்று கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தை முற்றிலும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், இந்த எண்ணெய்களின் மீதான வேளாண்செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சமையல் எண்ணெய்களின் விலை குறைகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 10 வரை சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளது. உதாரணமாக, ஒரு கிலோ பாமாயிலின் விலை ரூபாய் 7ம், கடலை எண்ணெயின் விலை ரூபாய் 10ம் குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின்படி ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வரி குறைப்பிற்கு முன்பு, அனைத்த வகையான கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வேளாண் உட்கட்டமைப்பு செஸ் 20 சதவீதமாக இருந்தது. குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மீதான வரி 8.25 சதவீதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 5.5 சதவீதமாகவும் இருந்தது.
தேசிய உற்பத்தி மற்றும் உப உற்பத்தி பொருட்கள் இணையவழி வர்த்தக அமைப்பில் கடுகு எண்ணெயில் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்