Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
விஜய் நல்ல தலைவர்கள் தேவை என்பது இருக்கிறது என சொன்னார். அதற்கு அர்த்தம், இங்கு நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை போதவில்லை என கூறுகிறார்.
தம்பி விஜய்க்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையின்போதும் நான் அவருக்கு துணையாக நின்றுள்ளேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 2வது ஆண்டாக சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கௌரவித்துள்ளார். கடந்த முறை ஒரே கட்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இம்முறை 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விஜய்யின் இந்த செயலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய் மாணவர்களை கௌரவித்தது பாராட்டுக்குரியது. அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்களை எடுக்க வைத்தார். கல்வி கூடங்களிலும் போதைப்பொருள் பயன்பாடு பெருகிவிட்டது. அதனால் தான் வலுக்கட்டாயமாக எடுக்க வைத்தார். நம்ம எல்லாருக்கும் அந்த பொறுப்பும், கடமையும் உள்ளது.
விஜய் நல்ல தலைவர்கள் தேவை என்பது இருக்கிறது என சொன்னார். அதற்கு அர்த்தம், இங்கு நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை போதவில்லை என கூறுகிறார். ஒவ்வொருவரும் ஊழல், லஞ்சத்துக்கும் எதிரானவர்களாக இருக்க வேண்டும் என விஜய் சொல்கிறார். யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால் யாரோ ஒருவர் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதைத்தான் ஒவ்வொருவரும் தலைவர்களாக வர வேண்டும் என நினைக்கிறார். எல்லாரும் பொறுப்போடும், கடமையுணர்வும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.
நான் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் இருந்து துணையாக நின்றுள்ளேன். விஜய் பெயரில் தபால் தலை, கத்தி, தலைவா பிரச்சினை என எல்லா சூழலிலும் நின்றிருக்கிறேன். அவர் என்னுடைய தம்பி. இதையெல்லாம் வைத்து கூட்டணிக்கான அஸ்திவாரமாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த நேரத்தில் அதை பேசுவது தான் சரி.
கட்சியை ஆரம்பித்து எதை நோக்கி நாம் பயணப்படுகிறோம் என்பது தான் இலக்காக இருக்க முடியும். விஜய் எந்த இலக்கோடு வரப்போகிறார் என்பதை இன்னும் 2, 3 மாதங்களில் தெரிந்து விடும். போதைப்பொருள் பயன்பாடு அரசுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா? விஜய் மட்டுமல்ல அனைவருக்கும் என்ன உண்மை என்பது தெரியும். என்னை மாதிரி விஜய் நேரடியாக பேச வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள். அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கிறது. அதை வெளியிட வேண்டும். விஜய நடந்ததை வெளிப்படையாக சொல்லாமல் குறியீடாக தான் சொல்கிறார்” என சீமான் தெரிவித்துள்ளார்.