ஆளுநருக்கே பாதுகாப்பில்லை... அமித் ஷாவுக்கு அண்ணாமலை அனுப்பிய கடிதம்!
மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி நடந்த சம்பவங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி நடந்த போராட்டம், அதில் நடந்த கல்வீச்சு, கொடிகள், தண்ணீர் பாட்டில்கள் வீச்சு போன்ற சம்பவங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழ்நாடு ஆளுனர் ரவி மயிலாடுதுறையில் ஆதீனத்தை சந்திக்க வந்தார். அவர் ஞானம் யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். அதன் துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 3 நாட்களாக காவல்துறைக்கு, அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை என்ன விதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்று நினைத்தோமோ அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
திமுக தொண்டர்கள், அந்த பகுதி தலைவர்கள், அவரின் கூட்டணி கட்சியினர்.. ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு கவர்னருக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். எப்போது ஒரு மாநில முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு, தனது கட்சியின் சித்தாந்தத்திற்காக இந்தியா அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளவர்களை எதிர்த்து வருகிறார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி அழைக்கப்பட்டிருந்தார். கடந்த மூன்று நாட்களாகவே தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவியை நிந்திக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். நீட் தேர்வில் விலக்கு கோரிய தமிழக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பதற்காக ஆளுநரை தமிழக முதல்வர் விமர்சித்தார். இன்று ஆளுநர் ரவி மயிலாடுதுறை சென்றபோது நடந்த போராட்டஙக்ள் எல்லாமே திட்டமிட்ட நடந்த போராட்டம் போன்றுள்ளது. 2019ல் பிரதமர் மோடி சென்னை வந்தபோது இதுபோன்று தான் நடந்தது.
போராட்டத்தில் ஆளுநரை ஒரு ‘கொலைகாரர்’ என்று விமர்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கொடி, தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசப்பட்டன ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகள் நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நடந்தது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கான அடையாளம். ஒரு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் என்ன செய்வது.
இவ்விவகாரத்தில் உள்துறை தலையிட்டு போராட்டத்தை தூண்டியவர்கள், நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.