NIA Raid: தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை.. என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த சோதனைக்கான காரணம் என்ன?
தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அதில் தொடர்புடையவர்கள், படித்தவர்களுடைய வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் என 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதற்கட்டமாக 6 பேர் மீதும், கடந்த ஜீலை மாதம் இரண்டாம் கட்டமாக 5 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்ட முகமது அசாருதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். முகமது அசாருதீன் ஏற்கனவே இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா திருச்சூர் சிறையில் உள்ள நிலையில், இவ்வழக்கிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாருதீன் ஐ.எஸ்.ஐ.எஸ். சித்தாந்ததால் ஈர்க்கப்பட்டவர் எனவும், ஜமேஷா முபீன் கேரள சிறையில் இருந்த அசாருதீனை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அசாருதீன் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் சிறைத்தாக்குதல் நடத்தி, அவரை சிறையில் இருந்து விடுவிக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், இஸ்லாமிய நம்பிக்கை இல்லாதவர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கோவை நகரில் இருக்கும் அரபிக்கல்லூரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 21க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் GM நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமமூன் அன்சாரி வீட்டில் சோதனைக்கு வந்துள்ளனர். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். லாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பிஸ்மில்லாத் தெருவில் புகாரி, திருவிக நகர் காமராஜர் தெருவில் முஜிபுர் ரகுமான், அயனாவரம் மயிலப்பன் தெருவில் முகமது ஜக்கிரியா ஆகிய மூன்று பேரின் வீடுகளிலும் சோதனை நட்த்தி வருகின்ற்னர்.