New Police Commission: தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும்.

தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவலர்கள், பொதுமக்கள் இடையே உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காவல்துறையானது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்பதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம் பொருளாதார வளர்ச்சி அமைதியான சூழல், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல்துறை தனது முயற்சியைத் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கப் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது.
காவலர்களின் நலன் காவலர் பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும் பொருட்டு கடந்த 1969, 1989 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசு முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்து அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்தது.
அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம், தனது 2021- சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் மீண்டும் கழக அரசு அமைந்தது. நான்காவது முறையாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு காலவரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்" என வாக்குறுதி அளித்திருந்தது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடந்த 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் "காவலர்" பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறைபணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும் புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் "காவல் ஆணையம்” ஒன்று மீண்டும் அமைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும். அந்தக் காவல் ஆணையத்திற்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திருசி.டி செல்வம் அவர்களைத் தலைவராகவும், திரு.கா அலாவுதீன் இ.ஆ.ப. (ஓய்வு), முனைவர் திரு.கே.இராதாகிருஷ்ணன், இ.கா.ய. (ஓய்வு), மனநல மருத்துவர் திரு.சி.இராமசுப்பிரமணியம், மேனாள் பேராசிரியர் முனைவர் திருமதி நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை குற்றப்புலனாய்வுர் கூடுதல் இயக்குநர் திரு மகேஷ்குமார் அகர்வால். இ.கா.ப. அவர்களை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும் உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

