கேப் விடாமல் இனி மழையா? நவம்பர் 13ல் அடுத்த காற்றழுத்தம்.. புதிய எச்சரிக்கை!!
நவம்பர் 13ஆம் தேதி தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரெட் அலர்ட் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!
சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுமா, புயலாக மாறுமா என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கவில்லை.
மேலும், புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு, திவீரமடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நாகப்பட்டினம் மற்றும் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் இதுவரை அதிகபட்சமாக 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Tamilnadu Rains | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எச்சரிக்கையா இருங்க.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழை - மன்னார்குடியில் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு