Seeman on Senthil Balaji Arrest: 'அப்பட்டமான அடக்குமுறை..' செந்தில்பாலாஜி கைதுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது.
சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எ.வ.வேலு, கே.என். நேரு, திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து நலம் விசாரித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசுகையில், ”தேர்தல் நெருங்க இன்னும் இது போன்ற பல விஷயங்கள் நடக்கும். இது ஒரு ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாடு கொண்ட நாடு, அதிகாரம் மக்கள் கையில் இருக்கும் நாடு என நாம் நமிக்கொண்டு இருக்கிறோம். அப்படி தான் கட்டமைக்கப்படுள்ளது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத்துறை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்று நினைத்தோம். ஆனால் இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் கை விரல்கள். அவர்களின் அசைவுக்கு ஏற்றவாறு இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பெரும் ஆளுமைகள் எல்லாம் இன்று காணாமல் போய் உள்ளது. இது சர்வாதிகார ஆட்சி கிடையாது, கொடுங்கோல் ஆட்சி” என கூறியுள்ளார்.