நாகூர் தர்கா சீரமைப்பு: ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும்

தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்த்தியுள்ளார்.
நாகூர் தர்கா
நாகூர் தர்கா (Nagore Dargah) (நாகூர் தர்கா அல்லது சையத் சாகுல் அமீது தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சூபி துறவி சாகுல் அமீதின் (பொது ஊழி 1490-1579 ) கல்லறையின் மீது கட்டப்பட்ட தர்கா ஆகும். இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கடலோர நகரமான நாகூரில் அமைந்துள்ளது. தர்காவின் வெளிப்புற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். உள் கதவுகள் காலை 4:00 மணி முதல் 06:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில், கதவுகள் கூடுதலாக 12:00 மணி முதல் 2:30 மணி வரை திறந்திருக்கும்.
நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,
தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் மண்டபங்களை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இது சரியல்ல.
நாகூர் தர்காவின் மண்டபங்கள் 350 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவற்றை சீரமைக்க ரூ.73 கோடி செலவாகும் என்று பல ஆண்டுகளுக்கு முன் மதிப்பீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாகூர் தர்காவின் பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் ரூ. 2 கோடி ஒதுக்கியதைத் தவிர வேறு எந்த உதவியும் செய்யவில்லை.
நாகூர் தர்காவை சீரமைக்கத் தேவைப்படும் நிதியுடன் ஒப்பிடும் போது அரசு ஒதுக்கிய நிதி யானைப்பசிக்கு சோளப் பொறியைப் போன்றதாகும். தர்கா சீரமைப்புக்கான முந்தைய மதிப்பீடான ரூ.73 கோடி இப்போது மேலும் அதிகரித்து விட்ட நிலையில், நாகூர் தர்கா சீரமைப்புக்காக தமிழக அரசு குறைந்தது ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நாகூர் தர்காவின் 469-ஆம் கந்தூரி வரும் நவம்பர் 21-ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், அதைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்களை வெளியிடவும், விழாவுக்கு வந்து செல்வோரின் வசதிக்காக நவம்பர் 20-ஆம் தேதி முதல் திசம்பர் ஒன்றாம் தேதி நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நாகூருக்கு சிறப்புத் தொடர் வண்டிகளை இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.





















