Naam Tamilar Party: சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து 2 புத்தகங்களை எடுத்துச்சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்! நடந்தது என்ன?
ஈழத் தமிழர்களிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ சோதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கூறுகையில், “ இன்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடந்த போது நான் வீட்டில் இல்லை. எனது மனைவி மட்டுமே இருந்தார். காலை 6 மணி முதல் 9 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பின் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓமலூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு யூடியூப் பார்த்து ஒருவர் துப்பாக்கி செய்ய முயன்றதாக சிவகங்கையில் அந்த நபரை கைது செய்தனர். அந்த நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் கட்சி உறுப்பினரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தான் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிரபாகரனின் எழுச்சி என நெடுமாறன் எழுதிய புத்தகம், திருப்பி அடிப்பேன் என்ற சீமானின் புத்தகம் ஆகிய இரண்டு புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளனர். வரும் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நாங்கள் தொடர்பில் இல்லை. ஈழத் தமிழர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்களிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டுள்ளது. அதற்கு வரி செலுத்தப்பட்டு உள்ளது. இதை பற்றி எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஓமலூர் வழக்கு தொடர்பாக மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு இல்லை என்ற நிலையில், தற்போது அந்த அமைப்பில் யார் இருக்கிறார்கள்? ஜனநாயக ரீதியான அமைப்பு தான் நாம் தமிழர் கட்சி” என தெரிவித்துள்ளார்.