சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சனைத்தீர்வு காணும் விதமாக சென்னை துறைமுகம்- மதுரவாயல் வரை இரண்டடுக்கு மேம்பாலத்திட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டடுக்கு மேம்பாலம் சுமார் ரூபாய் 5000 கோடி மதிப்பீட்டில் 20.6 கிமீ தூரத்திற்கு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இங்கு உயர்த்தப்பட்ட டபுள் டெக்கர் நீட்டிப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளால் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவருகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் இதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன்படி, நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் மாநில அரசு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 20.6 கிமீ நீளமுள்ள இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது, ஏன் இப்பணிகள் தாமதமாகின்றது? என்ன பிரச்சனை? எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் விரைவில் இப்பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுக்குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர்அதிகாரி ஒருவர், தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் 15 நாள்களில் தயாராகலாம் என தெரிவித்துள்ளார். இதோடு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் அனுப்பப்படும் எனவும் அவர்கள் ஒப்புதல் அளித்த பின்பு தான் அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். இதனையடுத்து தான் இத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கும் பணி எதுவும் நிறைவு பெறாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டிப்பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நெடுஞ்சாலைக்கு உதவும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிததத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் திறம்பட நடைபெற்றுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் பணிகள் துரிதமாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.