Kalaignar Magalir Urimaithogai: விடுபட்ட மகளிருக்கு தீபாவளி பரிசு.. ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான “குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்” வெற்றிக்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது. முதல் 2 ஆண்டுகள் இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பாண்டு மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்டது. ஒரு கோடியே 63 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். இதில் சுமார் 56 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியுள்ள 1.65 கோடி மகளிருக்கு உரிமைத்தொகையானது கடந்த 2 மாதங்களாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் நிராகரிக்கப்பட்ட மகளிர் மீண்டும் மேல்முறையீடு செய்து உரிமைத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதில் 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு இதன்மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 7.35 லட்சம் மகளிர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள புதிய பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று (நவம்பர் 10) தொடங்கி வைக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. இதனால் இதுவரை உரிமைத்தொகை கிடைக்காமல் கவலைப்பட்டு வந்த மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி சமயத்தில் மகளிர் உரிமைத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வருவதால், அதனை மேலும் உற்சாகமாக கொண்டாட முன்கூட்டியே உரிமைத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று முதல் (நவம்பர் 10) அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.