”ஆளுநரை இங்கு இருந்து தூக்கிவிடக்கூடாது என முதல்வரே கூறியிருக்கிறார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆளுநரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவரை பொருட்படுத்தவே இல்லை என்பதே உண்மை. ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவிதான்.
ஆளுநரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் “ஆளுநரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவரை பொருட்படுத்தவே இல்லை என்பதே உண்மை. ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவிதான். ஆளுநரை இங்கு இருந்து மாற்றிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறியுள்ளார். ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாடு என்ற பெயரையோ திராவிடம் என்ற சொல்லையோ நாங்கள் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றி. திராவிட இயக்கமானது கடந்த 100 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், மீட்சிக்கும், உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் உயர்வுக்கு காரணமாக திராவிட இயக்கம் அமைந்துவிட்டதே என்ற காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் பேசி வருகிறார்” எனத் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற புத்தக விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கடுமையான வார்த்தைகள் பயன்கடுத்த காரணம் என கூறப்படுகிறது.
அதாவது நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நாடு வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீனதயாள் உபாத்யாயா தத்துவம்தான் சரி எனக் கூறினார். அதன் பின்னர் மேற்கொண்டு அவர் பேசுகையில், “1956ஆம் ஆண்டுகளில் சென்னைப் பட்டினம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் பல்வேறு மொழிகள் பேசுபவர்களும் ஒற்றுமையாக வசித்தனர். குறிப்பாக மொழிப் பாகுபாடின்றி ஒற்றுமை உணர்வுடந்தான் வாழ்ந்தனர். 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாகாணத்திலிருந்து காநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் மொழிவாரிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அதேபோல் முன்பெல்லாம் திராவிடம் மற்றும் ஆரியம் பற்றி இந்த அளவுக்கு பேச்சுக்கள் மக்களிடத்தில் இல்லை. ஆனால் அதன் பின்னர் மக்கள் மத்தியில் பிரிவினை வரக் காரணம் திராவிடம் பற்றிய பேச்சுதான்” என ஆளுநர் ரவி தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தனது உரையில், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்திதான் தீனதயாள் உபாத்யாயா அரசியலில் பன்முகத்தன்மையுடன் கூடிய ஆளுமையாக இருந்தார். மேலும் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். குருமூர்த்தி சமூகம் பற்றி மட்டுமன்றி தனி மனிதன், நாடு பற்றியும் மக்களிடத்தில் பேசியவர் என ஆளுநர் குறிப்பிட்டுருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆளுநர் மேற்கத்திய தத்துவம்தான் மக்களைப் பிரிக்கின்றது எனக் கூறியிருந்தார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திராவிடம் குறித்து அவர் கூறியுள்ளது திமுகவினர் மட்டுமல்லாது திராவிட இயக்கங்கள் மத்தியிலும் கோபத்தை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.