Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி; கரூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினர். அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு.
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர் வீடு என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், தனியார் நகைக்கடை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு என நேற்று காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினர். கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி (எ) சுப்பிரமணி வீடு, வெங்கமேடு பகுதியில் சண்முகம் வீடு, ஈரோடு சாலையில் உள்ள ரமேஷ் பாபு வீடு, செங்குந்தபுரம் பகுதியில் ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம், ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை, வேலாயுதம்பாளையம் கார்த்தி, என 8 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சோதனை நடைபெற்றது. 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அமலாக்கதுறையினரின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. பழனி முருகன் ஜுவல்லரி, ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் என கரூரில் சில இடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து டிஐஜி சரவண சுந்தர் ரோந்து பணி மூலம் கண்காணித்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கரூர் எஸ்பி சுந்தரவதனம் பேட்டி:
கரூர் மாவட்டம் குளித்தலையில் இன்று காலை பாஜக கொடிக் கம்பம் சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கரூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாவட்டம் முழுவதும் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜி கைதை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய சட்ட உரிமை கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் செந்தில் பாலாஜி கைதை வரவேற்று அந்த அமைப்பை சேர்ந்த நபர்கள் பட்டாசு வெடிக்க வந்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 3 நபர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.