(Source: ECI/ABP News/ABP Majha)
Maridhas Case: முப்படை தலைமை தளபதி குறித்து சர்ச்சை பேச்சு: மாரிதாஸ் வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூட்யூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.
முன்னாள் ராணுவத் தளபதி பிபின் ராவத் மரணத்தின்போது தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாக சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசியிருந்தார். இது தொடர்பாக மாரிதாஸ் மீது தமிழ்நாடு அரசு பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
முன்னதாக, இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூட்யூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரின் கருத்து பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை காவல் துறையினர் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மாரிதாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மாரிதாஸ் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாரிதாஸின் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற வகையில் பேசியிருந்தார். இவரின் பேச்சு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்று நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் 292 A, 295 A, 505 ( 2), It act 67 ஆகிய நான்கு பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டுமென மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது நீதிபதி சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மாரிதாஸ் மீது மேலப்பாளையத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதுவரை மாரிதாஸ் போடப்பட்ட வழக்குகளில் இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் சூழலில் தனியார் தொலைக்காட்சிக்கு போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்