ஜாதி ரீதியாக பேசிய ஆசிரியர்கள்; குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிமன்றம் கேள்வி
அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மற்றொரு ஆசிரியரைப் பற்றி தரக்குறைவாக மாணவருடையே பேசியுள்ளார். இது மாணவர் இடையே ஜாதி ரீதியானயான தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
மாணவரிடம் தொலைபேசியில் சாதி ரீதியான தூண்டுதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய ஆசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், குளத்தூர் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் விசாரணை முடித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா பகுதியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 16.06.2022 ஆசிரியர் மற்றும் மாணவர் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மற்றொரு ஆசிரியரைப் பற்றி தரக்குறைவாக மாணவரிடம் பேசியுள்ளார். இது மாணவர் இடையே ஜாதி ரீதியான தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்த ஆடியோவில் பேசியது குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. ஆசிரியர்களே மாணவர் இடையே ஜாதி ரீதியான தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் பேசி உள்ளனர். இது சம்பந்தமாக குற்ற நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையில் குளத்தூர் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் விசாரணை முடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மதுரை பள்ளப்பட்டி கிராமத்தினர்
மதுரை மாவட்டம், பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர்.திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, முக்கியமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும்.
1994ஆம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின் போது பத்து காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும். வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரிக்கையை பரிசீலிக்காமல், கொரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.எனவே, பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஜூலை 15ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்