AIADMK Tussle : அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி
அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்- இடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அலுவலகத்திற்கு செல்லும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நுழைந்தபிறகே லேசான தடியடியை நடத்தி உள்ளனர்.
பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையை கட்டவிழ்த்தது போன்றவற்றை செய்திருக்க கூடாது என தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது எனவும், இரு தலைவர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
#BREAKING | அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!https://t.co/wupaoCQKa2 | #AIADMK #ADMK #EdappadiPalaniswami #opannerselvam #OPSvsEPS pic.twitter.com/rNM3KJWjYh
— ABP Nadu (@abpnadu) July 20, 2022
காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும் எனவும், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெருமான்மையினரின் முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும்.
மேலும், ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி அலுவலக கட்டடத்தின் மீதான சுவாதீன உரிமையை கோர முடியாது.
கட்சியில் இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை என்பது சொத்தில் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பது வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை என்பதால், கட்சியின் இரு பிரிவினர் இடையேயான பிரச்சினை என்று மட்டுமே சொல்லப்பட்டு உள்ளது.
கோட்டாட்சியர் உத்தரவில் ஜூலை 11ஆம் தேதி கட்சி அலுவலகம் யார் தரப்பிடம் இருந்தது என கூறவில்லை, ஆனால் அந்த தகராறு மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளாதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே ஆர்.டி.ஓ. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவானது ஆர்.டி.ஓ மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும், ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது, கட்சி அலுவலகம் ஒ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருந்ததும் தெளிவாகிறது.
பொதுக்குழு மற்றும் வன்முறை நடந்த ஜூலை 11ஆம் தேதி கட்சி அலுவலம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது என எவ்வித விசாரணையும் நடத்தாமல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தவறு எனவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர், அந்த கட்சி அலுவலகத்தில் எவ்வித உரிமையும் கோர முடியாது. தனிப்பட்ட நபருக்கு சொந்தமல்லாத கட்சி அலுவலத்தை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்தது அத்துமீறி நுழைவதாகத்தான் கருத வேண்டும்.
சீல் வைக்க வேண்டும் என்றால் நிலம், மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான உண்மையான பிரச்சினை இருக்க வேண்டும். கலவரத்தை உருவாக்கி பிரச்சினை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது, கட்சி அலுவலகத்தில் உண்மையான பிரச்சினையாக கருத முடியாது என்றார்
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும் எனவும், காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்திருந்தார்
ஒரு மாதத்திற்கு ஆதரவாளர்கள், தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது. காவல்துறை தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பாதுகாக்க வேண்டும் என்றார்
சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஒ.பி.எஸ். கோரிக்கை நிராகரித்தும், ஒ.பி.எஸ். இ.பி.எஸ். ஆகியோரின் வழக்குகள் முடித்துவைக்கப்படுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்