அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி; நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டது என்ன..? - முழு விவரம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பின் தேதியை இன்று ஒத்தி வைத்தார்.
அந்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில், சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்தவில்லை என்றால் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை எனவும், 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும் எனவும், பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் எனவும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவது துரதிருஷ்டவசமானது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது எனவும் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்