Pulamaipithan Songs : ’காலமான புலவர் புலமைப்பித்தன்’ காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை படைத்தவர்..!
அவர் எழுதிய ‘ புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை ; இந்த பாரதத்தில் சோற்றுச் சண்டைத் தீரவில்லை’ என்ற பாடல் பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது
தனது பாடல் வரிகளால் புகழின் உச்சிக்கே சென்ற புலவர் புலமைப்பித்தன், 86வது வயதில் காலமாகி தமிழ் எழுத்துலகை கண்ணீர் கடலில் ஆழ்த்திருக்கிறார். அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்பவை.
எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக’நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், தாய் யார், மகன் யார், தெரியார்’என்ற தனது முதல் பாடலை எழுதி கவனம் பெற்றவர். அதன்பிறகு அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆருக்காக ஏராளமான பாடல்களை எழுதிய புலவர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக தொடங்கியபோது அவருடனே இணைந்து செயலாற்றினார்.
தங்கை திருமணத்தின்போது ஒவ்வொரு அண்ணனின் நெஞ்சில் உதிக்கும் பாடலாக புலமைப்பித்தன் எம்.ஜி.ஆருக்காக எழுதிய ‘பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது ; எழில் கொஞ்சிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது’ என்ற பாடல் அந்த காலத்தில் இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.
நல்ல நேரம் படத்தில் அவர் எழுதிய ‘ஓடி ஓடி உழைக்கனும், ஊருக்கெல்லாம் கொடுக்கனும் ; ஆடி பாடி நடக்கனும், அன்பை நாளும் வளர்க்கனும்’ என்ற பாடல், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக ‘சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ; உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே’ எனும் பாடல், உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் அவர் எழுதிய ‘நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே’ என்ற பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆரை ஏழை எளிய மக்களிடம், உழைப்பாளர் வர்க்கத்தினரிடமும் எளிமையாக கொண்டுச் சேர்க்க உதவியது.
’காய்ச்சிய பாலுக்கு தானடி ஆடை ; காமத்து பாலுக்கு ஏனடி ஆடை’ – ‘இனங்களிலேயே என்ன இனம் பெண்ணினம், மெய் எழுத்துகளில் இருக்கும் அந்த மெல்லினம், மனதிற்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம், என் மன்னனுக்கு பிடித்தது எல்லாம் இடையினம்’ என்றேல்லாம் இலக்கிய வடிவில் அவர் எழுதிய பாடல்கள் பாமரனை கூட தமிழ் குடிக்க வைத்தது.
கமல் நடித்த ’உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் அவர் எழுதிய ‘ புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை ; இந்த பாரதத்தில் சோற்றுச் சண்டைத் தீரவில்லை’ என்ற பாடல் பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது.
ரஜினிக்காக அவர் எழுதிய ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ, ராஜசுகம் தேடி வர தூதுவிடும் கண்ணோ ; சேலை சோலையே, பருவ சுகம் தேடும் ஆலையே’ என்ற பாடல், ஈரமான ரோஜாவே படத்தில் இடம்பெற்ற ‘அதோ மேக ஊர்வலம், அதோ மின்னல் தோரணம், அங்கே..’ எனும் பாடல் வரிகளையெல்லாம் எழுதி காதலையும் காமத்தையும் கேட்பவர்களுக்கு கசிந்துருக வைத்த, இதே புலமைப்பித்தன் தான், ‘நாயகன்’ படத்தில் ‘தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே, மான்போல வந்தவனே யார் அடிச்சாரோ’ என்ற வரிகள் மூலம் பார்ப்பவர்களின் கண்களையும் குளமாக்கினார்.
புலமைப்பித்தன் புலவர் படிப்பு படித்தவர் என்பதால் தமிழின் இலக்கணங்களையெல்லாம் தனது பாடல்கள் மூலம் பாமரர்களுக்கு புகட்டினார். அப்படி அவர் ’பிறிதுமொழிதல் அணியை’ பயன்படுத்தி எழுதியதுதான் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சு பூ வச்ச கிளி, பச்ச மல பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க’ என்ற பாடல்.
தமிழ், தமிழர், திராவிட இயக்கத்தின் மீது மாறாப்பற்றுக்கொண்டிருந்த புலமைப்பித்தன், ஈழத் தமிழர்கள் மீது பெரும் அன்புக்கொண்டிருந்தார். அவரது இல்லத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் தங்கியிருந்தனர் என்பது வரலாறு. புலைமைப்பித்தன் இல்லத்தை ‘உங்கள் இல்லம் ,ஈழத் தமிழர்களின் இரண்டாவது தாயகம்’ என அவர்கள் வர்ணித்ததும் இப்போது நினைவுக்கூறத்தக்கது
இப்படி, உறங்கி கிடக்கும் சமூகத்தை தட்டி எழுப்பும் விதமாகவும், பகுத்தறிவை பரப்பும் வகையிலும் புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள், தமிழ் உணர்வு, திராவிட பற்று எல்லாம் அவர் மறைந்தாலும் அவரது புகழை காலத்திற்கும் நிலைத்து நிற்க செய்யும் !