TN Rain Alert: சென்னையை குளிர்வித்த திடீர் மழை.. 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை 8 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
30.08.2023 மற்றும் 31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.09.2023 மற்றும் 03.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கிச் சென்றனர். சென்னையில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மாலை நேரத்தில் பகல் நேரத்தில் இருந்த வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இன்று அதிகாலையில் நகரின் அனேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்து வருகிறது. அடையாறு, மத்திய கைலாஷ், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த திடீர் மழை காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி முழுவது மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.