Tamilnadu Government: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசு - தலைவர்களின் கருத்து என்ன?
ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் இன்று மாலை தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தை சிபிஐ, சிபிஎம், விசிக, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சகர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் சந்தித்தனர். இந்தச் சந்திபிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளது எனக் கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆளுநர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த சிறப்பு விருந்தை ஆளுநர் அளிக்கிறார். அத்துடன் பாரதியாரின் திருவுருவ சிலை திறக்கப்பட உள்ளது. இது தமிழ் கலாச்சாரம் தொடர்பான விருந்து என்பதால் ஒரு தமிழ் பற்றாளர் என்ற வகையில் அவர்கள் கலந்து கொள்வது தான் நல்லது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, “காங்கிரஸ் கட்சியும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது. தமிழக மக்களுக்காக தமிழ்நாடு அரசு உள்ளது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் நிரூபித்துள்ளார். தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சுயமரியாதை முதலமைச்சர் தற்போது ஆட்சியில் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “தமிழ்நாட்டின் ஆளுநர் என்பவர் தமிழக மக்களை மதிக்க வேண்டும். சட்டப்பேரவையை மதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கவில்லை. ஆகவே அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்