Karur: கொத்தபாளையம் தடுப்பணையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
கொத்தபாளையம் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்று உள்ளனர். முஸ்தபாவுக்கு ஏற்கனவே நீச்சல் தெரியும்.
கரூர் மாவட்டம் கொத்தபாளையம் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க வந்த இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யூனியன் ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் மகன் முஸ்தபா வயது 20. இவர், கும்பகோணத்தில் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், ஊருக்கு திரும்பிய முஸ்தபா, அவரது நண்பர்கள் அரவக்குறிச்சியில் அவ்வையார் தெருவை சேர்ந்த பிரேம் குமார் வயது 23, புதுதெருவை சேர்ந்த முகமது ஆசிக் அலி வயது 23, ஆகியோருடன் டூவீலரில் அரவக்குறிச்சி தாலுகா, கொத்தபாளையம் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்று உள்ளனர் முஸ்தபாவுக்கு ஏற்கனவே நீச்சல் தெரியும்.
தற்போது அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பொருட்படுத்தாமல், ஆழமான பகுதிக்கு முஸ்தபா சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடன் சென்ற அவரது நண்பர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் நேற்று மாலை முதல் முஸ்தபாவின் உடலை தேடி வந்தனர். தீயணைப்பு துறையினர் பரிசல் மற்றும் போட் மூலமாக தேடி இன்று மதியம் ஒரு மணி அளவில் முஸ்தபாவின் உடலை மீட்டனர். உடனடியாக அவரது உடலை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.