புதிய திட்டத்தால் பரிதவிக்கும் பள்ளப்பட்டி.. மீண்டும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மக்கள்
பள்ளப்பட்டி குப்பை சேமிப்பு கிடங்கு அமைந்துள்ள பகுதியில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு. பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் 40,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் சேமிக்கப்படும் குப்பைகள் லிங்கம் நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் குப்பைமேடு அருகாமையில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகளை பிரித்தெடுத்து அருகிலேயே கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகள் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர்.

தற்போது பள்ளப்பட்டி நகராட்சியின் மூலம் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அதே பகுதியில் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் இப்பகுதியில் இன்னும் மோசமான சூழ்நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நகர்மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீது கூறுகையில்: இப்பகுதியில் குப்பைக்காடு இருக்கும் 100 மீட்டர் தொலைவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மகளிர் கல்லூரியும் உள்ளதாகவும் மேலும் இந்த குப்பை சேமிப்பு பகுதியை அகற்றுவதற்கு எண்ணற்ற கோரிக்கை மனுக்களும் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் வசித்து வருவதால் மீண்டும் இப்பகுதிக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவதால் இந்த பகுதிக்கு மட்டுமல்ல பள்ளப்பட்டி முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்படும் எனவும்,

ஏற்கனவே ஆசாத் நகரில் பல்வேறு இடங்களில் போர்வெல் மூலம் குடிநீர் கூட குடிப்பதற்கு உகந்ததல்ல
என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி மூலம் குடிநீர் பரிசோதனை செய்தனர். இப்படி இருக்கும் இந்த சூழலில் மீண்டும் அதே பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்த நகராட்சி ஆணையர் இடம் விளக்கம் கேட்டதற்கு: நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படாது எனவும், குப்பை கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.






















