அமராவதி ஆற்றங்கரையில் சுகாதாரமின்றி காய வைக்கப்பட்டுள்ள டெல்லி அப்பளம் - மக்களே கவனமா இருங்க
கரூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றங்கரையில் சுகாதாரமின்றி காய வைக்கப்பட்டுள்ள டெல்லி அப்பளம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றங்கரையில் சுகாதாரமின்றி காய வைக்கப்பட்டுள்ள டெல்லி அப்பளம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவிழாக்களில் விற்கப்படும் பெரிய வகை டெல்லி அப்பளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியவை. குழந்தைளுக்கு இதுபோன்ற பெரிய வகை அப்பளம் என்றால் மிகவும் விருப்பம். அதனால் அதனை வாங்கித் தருமாறு தங்களுக்கு பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தைகள் ஏராளம். இந்த நிலையில் கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பானி பூரி, மசால் பூரி, காலிஃப்ளவர் சில்லி மற்றும் டெல்லி அப்பளம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், அமராவதி ஆற்றங்கரையில் இந்த அப்பளத்தை காய வைப்பதை பார்த்தால் இனி இந்த அப்பளத்தை வாழ்நாளில் உண்ணவே மாட்டீர்கள். அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. திருவிழாவானது அமராவதி ஆற்றங்கரையில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் அமராவதி ஆற்றங்கரையில் விற்கப்படும் அப்பளத்தை காய வைப்பதற்காக, கரூரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் சேரும், சகதியுமாக உள்ள இடத்தில் தரை மீது போடப்படும் விரிப்பில் ஈரமான அப்பளத்தை காய வைக்கின்றனர்.
அது மட்டுமின்றி அதே இடத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட எச்சில் தட்டுகள் மற்றும் காகிதங்களை காய வைக்கப்பட்ட அப்பளங்களின் மீதே பொதுமக்கள் தூக்கி வீசி சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திருவிழா சமயங்களில் போடப்படும் தற்காலிக கடைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.