கரூரில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற பெண் தவறான சிகிச்சையால் மரணம் எனக் கூறி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள சென்ற பெண் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டார் என உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள கல்லுமடை பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் கொத்தனார். இவரின் மனைவி ஜோதி 27. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் வெள்ளியணை அடுத்துள்ள உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதியாக ஜோதிக்கு மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய போது சுயநினைவை இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அருகில் இருந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜோதியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தவறான சிகிச்சை காரணமாகத்தான் பெண் இறந்துள்ளார என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற பசுபதிபாளையம் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறினர். இதையடுத்து அனைவரும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் முகேஷ் குமார் வெள்ளியணை காவல் நிலையத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக ஜோதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தற்போது திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களை சமாதானப்படுத்த பசுபதிபாளையம் போலீசார் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட மருத்துவரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் ஜோதியின் பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். கரூர் அருகே இளம்பெண் தவறான சிகிச்சையில் உயிரிழப்பு சம்பந்தமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.