கரூரில் தைப்பூச திருவிழா நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதால் காவிரி ஆற்று பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தைப்பூச விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூச தினத்தினை முன்னிட்டு குளித்தலை அய்யர் மலை ராஜேந்திரம் கருப்பத்தூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை, முசிறி, வெள்ளூர் திருஈங்கோய்மலை சிவாலயங்களைச் சேர்ந்த எட்டு சோமஸ் கந்தர்கள் அம்பாளுடன் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கண்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் ஜனவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழாவினை நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற்றது.
தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதால் காவிரி ஆற்று பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்றும், மேலும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுவாமிகள் வரும் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டன.
இதில் எட்டு ஊர் கோயில் செயல் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள், காவல்துறை தீயணைப்பு துறை பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.