Ramajayam Murder Case : கே.என். ராமஜெயம் கொலை வழக்கு... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன. பல்வேறு அமைப்புகள் விசாரித்து விட்டன. நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தியான நியாயம் கிடைக்கும் என நம்புவதாக ராமஜெயம் சகோதரரும் மனுதாரருமான ரவிச்சந்திரன் தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குற்றவாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளாக பல கட்ட விசாரணைகள் நடந்தும், கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து,மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. இந்நிலையில், ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் சந்தேகத்திற்குரிய நபர்கள் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சிபிசிஐடி போலீஸார் அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்த சோதனை நடைபெற்றது.
மேலும் படிக்க,