Medical Admission All India Quota: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு; தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர் அதிகளவில் சேர ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர் அதிகளவில் சேர தமிழ்நாடு அரசு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள விதியின் படி மொத்த மருத்துவ மாணவ இருக்கைகளில் 15 விழுக்காடு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 85 விழுக்காடு சொந்த மாநில ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 5000க்கும் மேற்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான இடங்களில் 772 இடங்களை தமிழ்நாடு அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கியுள்ளது. இந்த 772 இடங்களில் அகில இந்திய அளவில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அல்லது தமிழ்நாட்டை சேராத மாணவர்களும் விண்ணப்பித்து மருத்துவப் படிப்பில் சேரலாம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக உள்ள 772 இடங்களில் மருத்துவக் கல்வி பயில தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சரிவர விண்ணப்பிக்காத காரணத்தால் இதுவரை 103 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு மீதமுள்ள 669 இடங்கள் காலியாக உள்ளதாகத் தகவல் வருகிறது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பா?
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர்களும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 85 விழுக்காடு இடங்களிலேயே போட்டி போடுவதால் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மருத்துவ இடங்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 85 விழுக்காட்டில் அனைத்து மாணவர்களும் போட்டி போடுவதால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் வெறும் பகல் கனவாகவே உள்ளது.
எனவே, தமிழக அரசு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர தமிழ்நாடு அரசு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’.
இவ்வாறு எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.17ஆம் தேதி வெளியான நிலையில், மாநில இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19-ம் தேதி தொடங்கியது.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடியாக அதே தினத்தில் தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் 20-ம் தேதி நடைபெற்றது. இதில் 565 பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் அக்டோபர் 31ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.