நினைவிருக்கிறதா இவரை? காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்..
இறந்துவிட்டார் என்று கூறப்பட்ட இளைஞரை இல்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தோளில் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்தவர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.
இறந்துவிட்டார் என்று கூறப்பட்ட இளைஞரை இல்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தோளில் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்தவர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. அவரை ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே அழைத்துப் பாராட்டிய நிலையில் இன்று குடியரசு தின விழாவில் அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன செய்தார் என்பவர்களுக்காக இந்தச் சுருக்கம்:
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் பணியாற்றி வருபவர் உதயா. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையிலே பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உதயாவிற்கு, சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் உடல்நலம் மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிலையில், உதயா இன்று கல்லறையின் மீதே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த டி.பி.சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார்.
முழுவதும் மயங்கிக்கிடந்த உதயாவை திரைப்படங்களில் காட்டுவது போல தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், உதயாவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
யார் இந்த ராஜேஸ்வரி?
டி.பி.சத்திரம் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி ஏற்கெனவே அறியப்பட்டவர்தான். தன்னுடைய துணிச்சலான செயல்களுக்கும் ,மனிதாபிமானத்திற்கு பெயர் போனவர். கீழ்பாக்கம், அண்ணாநகர்ப் பகுதிகளில் குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களை காப்பாற்றுவது ,ஏழைகளுக்கு உதவுவது ,கிரிமினல் குற்றவாளிகளை பயமில்லாமல் கையாளுவது என்று இவரின் சாதனைகளை பட்டியலிடலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூரில் நடந்த காவல்துறை மாநாட்டில் ஐபிஎஸ் இல்லாத போலீஸ் அதிகாரிகளில் இவருக்கு மட்டும் துணிச்சலுக்கான விருது கிடைத்தது. கொரோனா பேரிடர் நேரத்திலும் இவரின் பணி மிகச் சிறப்பாக இருந்தது.
அயனாவரம் சிறுமிக்கு உதவியவர்:
குறிப்பாக அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் 13 பேரை பிடித்தவர் இவர்தான். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகளால், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை பெற்றுக் கொண்டார். இதனால், மீண்டும் சமூக வலைதளங்களில் ராஜேஸ்வரிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. அவர் படங்களும் வைரலாகி வருகின்றன.