கலைஞரை பெயர் சொல்லி கூப்பிட்டால் அப்பா திட்டுவார்… பராசக்தி திரையிடலில் நடிகர் பிரபு!
இப்போ அரசியல்லாம் ஒத்து வராதுப்பா, இப்போ போய் முத்தமெல்லாம் கொடுத்தா ஒத்து வராது' என்று கூறி, அதுக்கு பதிலா என்ன செஞ்சேன் தெரியுமா, டிவில அவன் நடிக்கிறப்போ அவன தொட்டு முத்தம் கொடுத்தேன்பா' என்றார்.
"உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கபட்டேன்… சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல" என்ற பகுதி கொண்ட முழுநீள வசனமெல்லம் தமிழ் சமூகத்தின் புரட்சி வித்து, சினிமாவில் சமூக கருத்துக்கான ஆரம்ப புள்ளி. இத்தகைய வசனத்தை எழுதியவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி.
பராசக்தி திரைப்படம்
கலைஞருடைய கதை, வசனத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து 1952ஆம் ஆண்டு வெளியான படம் பராசக்தி. சமூக சிந்தனையும், புரட்சிகரமான வசனங்களும் இளம் ரத்ததை துடிப்பேற்றும் சிவாஜி கணேசனின் துடிப்பான நடிப்பும் இந்த படத்தை மாபெரும் வெற்றி ஆக்கியது. தற்போது அந்த கலைஞர் பிறந்து 100 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல நிகழ்வுகளை செய்து வருகிறது. குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒடிஷா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
பராசக்தி திரையிடலில் பிரபு
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிரணி சார்பில் நேற்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் பூச்சி முருகன், தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசும்போது, "பெரியப்பாவ (கலைஞர்) பேர் சொல்லி கூப்ட்டா அப்பா திட்டுவாரு… அவரென்ன உன் கூட படிச்சவரான்னு கேப்பாரு," என்று கூறிய பிரபு, கலைஞர் உடன் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு என்று கூறினார். அதில் ஒன்றை கூறி அரங்கத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தி.மு.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற பராசக்தி திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது… pic.twitter.com/DaNqEbl7WT
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 4, 2023
சிவாஜிக்கு டிவி-யில் முத்தம் தந்த கலைஞர்
"ஒருநாள் முதலமைச்சர் உங்களை பாக்கணுமாம் கோபாலபுரத்துக்கு வாங்கன்னு ஒரு போன் வருது. நான் என்னமோ எதோன்னு பதறி போய் பாத்தேன். 'வாப்பா பிரபு, உக்காரு' ன்னாரு பெரியப்பா. 'நைட்டெல்லம் தூக்கமே இல்லப்பா' ன்னாரு. ஏன் என்னாசுன்னு கேட்டேன். 'நேத்து என் நண்பன் கணேசன் படத்த பாத்தேன்பா, தூக்கமே வர்லப்பா. என்னா நடிப்புப்பா நடிக்கிறான்பா' என்றார். நான் உடனே போய் அப்பாவ கூட்டிட்டு வரவான்னு கேட்டேன். 'வேணாம்பா, இப்போ அரசியல்லாம் ஒத்து வராதுப்பா, இப்போ போய் முத்தமெல்லாம் கொடுத்தா ஒத்து வராது' என்று கூறிவிட்டு, அதுக்கு பதிலா என்ன செஞ்சேன் தெரியுமா என்றார். என்ன செஞ்சீங்க என்றேன், 'டிவில அவன் நடிக்கிறப்போ அவன தொட்டு முத்தம் கொடுத்தேன்பா' என்றார். அப்படி அவர்களுக்குள் இருந்த பாசம் அவ்வளவு பெரிது. அவங்க ரெண்டு பேரும் உக்காந்து பேசினா கேட்டுகிட்டே இருக்கலாம்," என்று கூறினார்.