நான் ஆடு மேய்ச்சுத்தரேன்; நீங்க தடுப்பூசி போட்டுக்கோங்க - டாக்டரின் சூப்பர் ஸ்பீச்!
நான் ஆடு மேய்ச்சுத்தரேன்; நீங்க தடுப்பூசி போட்டுக்கோங்க என கிராமவாசியிடம் தடுப்பூசிக்காக பிரசாரம் செய்யும் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான் ஆடு மேய்ச்சுத்தரேன்; நீங்க தடுப்பூசி போட்டுக்கோங்க என கிராமவாசியிடம் தடுப்பூசிக்காக பிரசாரம் செய்யும் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்றாடம் நாம் தொலைபேசியை எடுத்து ஒரு நம்பரை டயல் செய்தால் போதும் மறுமுனையில் ஒரு ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனப் பேசும். பல நேரம் அது இந்தியிலோ, ஆங்கிலத்திலோ இருக்கும். அப்படியே நமக்குப் புரிந்தாலும் கூட அதை நாம் கவனிக்காமல் இருப்போம். ஆனால், மருத்துவர் ஒருவர் தடுப்பூசிக்காக இங்கே சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கேட்டால் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போவீர்கள்.
மொத்தமே 29 விநாடிகள் தான் அந்த வீடியோ ஓடுகிறது. அதில் நீலச்சட்டை அணிந்த மருத்துவர் ஒருவர், ஆடு மேய்க்கும் நபரிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சொல்கிறார். அந்த நபரோ எனக்கு அந்த ஊசி மேல எல்லாம் பயமில்லீங்க. ஆனா அதப்போட்டா கை, கால் வலி வருமே. அப்புறம் யாரு இந்த ஆடு, மாட மேய்க்குறது எனக் கேட்பார். இன்னிக்கு நான் ஊசி போட்டுக்குறேன். நாளைக்கு நீங்க மேய்ப்பீங்களா எனக் கேட்க, அப்போது மருத்துவர் குறுக்கிட்டு ஆடு மேய்க்கணும் தானே. நாளைக்கு நான் பார்த்துக்குறேன். நீங்க இன்னிக்கு ஊசி போடுங்க எனக் கூறுகிறார். மருத்துவரின் அருகில் இருக்கும் சுகாதாரப் பணியாளர். ஏப்பா, உன் மனைவிக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினாரு நம்ம டாக்டர் என நன்றிக்கடனை நினைவூட்டுகிறார். ஆனால், அந்த நபரோ எதற்கு மசிவதாக இல்லை. அவர் அந்த இடத்திலிருந்து நகர்கிறார்.
இந்த வீடியோவை ட்விட்டர் தளத்தில் யாழினி என்ற மருத்துவர் பகிர்ந்துள்ளார். மருத்துவர் தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த நபர், மருத்துவரின் கோரிக்கைக்கு செவிகொடுக்காமல், செவிலியர் ஏற்கெனவே மருத்துவர் செய்த உதவியைக் கூறியும் அதனையும் கருத்தில் கொள்ளாமல் நடந்து செல்கிறார். ஒரு சுகாதாரப் பணியாளரிடமிருந்து இந்தச் சமூகம் இன்னும் என்னதான் எதிர்பார்க்கிறது.
அவரது பதிவின் கீழ் நிறைய பேர் உருக்கமாகப் பின்னூட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் சுகாதாரப் பணியாளர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை இவ்வளவு தானா என்று கேள்வி எழுப்புகிறார்.
இன்னொரு பதிவர், சுகாதாரப் பணியாளர்களின் நிலையை நினைத்து நான் வருந்துகிறேன். தொலைக்காட்சி, ரேடியோக்களில் பிரபலங்களைக் கொண்டு இன்னும் அதிகமாக தடுப்பூசி பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டால் அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடையுன் என நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 91.54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 25% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பெரியவர்களில் 70% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி மட்டும் தான் கரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக இருக்கும்போது இன்னமும் சுகாதரப் பணியாளர்கள் மக்களிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.