Resolution on Hindi Imposition: ”இந்தி மொழிக்கு தாய்ப்பால்; மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மாணம் கொண்டு வரப்பட்டது.
இந்தி மொழி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் பேசியதாவது,
1938 ஆம் ஆண்டு முதல், இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கச் சக்திகளும் விடுவதாக இல்லை; நாமும் விடுவதாக இல்லை.
இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்; தொடரவே செய்வோம் என்று இந்தப் பேரவையின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
”இந்தி மொழி திணிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளது”
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது, இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி, கல்வி மூலமாகத் திணிப்பதுவரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.
ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு - ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து, மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியா என்பது,
பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் நாடு, இந்தியா. வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
”நேரு அளித்த உறுதிமொழி”
இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது. அவர்கள் விரும்பும்வரை ஆங்கிலம்
ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த உறுதிமொழிதான் இன்றுவரை இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது.
இந்திமொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக
மட்டுமில்லை; அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியும், ஆங்கிலமும்தான் அலுவல் மொழியாக இத்தனைகாலம் இருந்துவரும் நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு.
அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
”பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது”
அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.
பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் அதே உணர்வுடன், இந்தத் தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.