TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
நெல்லை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மாவட்டங்களில் அனைத்து துறைகள் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பருவமழை தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

. தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகரும் எனவும் இதனால் தமிழகத்தில் அடுத்த கட்டமாக மீண்டும் மழையில் அளவு வேகமெடுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுக்க பரவலாக கனமழைக்கும், டெல்டா, தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் நெல்லை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மாவட்டங்களில் அனைத்து துறைகள் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கும், நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அவசர காலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடனடி தகவல்கள், உணவு தேவை, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத் துறை, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாளை ஒரு சில இடங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















