தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை: வானிலை மையம் தகவல்
கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், நேற்றைய தினம் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 36 டிகிரி செல்சியஸ் என அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், அக்டோபர் 9ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய சக்தி தீவிர புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
மேலும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்டோபர் 7ம் தேதி அன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2-3 டிகிரி அதிகம் இருக்க கூடும். ஒருசில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















