‛சிரித்தது அவர்; மகிழ்ச்சி என்னமோ எனக்கு’ வைரல் பாட்டியை கிளிக் செய்த போட்டோ கிராபர் நெகிழ்ச்சி!
‛‛பல்வேறு இடங்களில் புறக்கணிக்கப்பட்டேன். இவன் ஒரு டுபாக்கூர் போட்டா கிராபர் என்றெல்லாம் என்னை பேசியுள்ளனர். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை அதையெல்லாம் கடந்து தான் பணி செய்தேன்’’
தமிழ்நாட்டில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள், கொரோனா நிவாரணம் உதவித்தொகை இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் பணத்தோடு 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பணத்தை வாங்கிச் சென்ற நிலையில் சுருங்கிய தோல், பொக்கை விழுந்த கண்ணம், அகலமான நெற்றி, பல் இல்லாத சிரிப்பு என்று 2 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களுடன் முகம் மலர்ந்த அந்த பாட்டியின் புகைப்படம் வைரலாக பரவியது. ஏக்கத்தில் இருந்த பாட்டியின் முகத்தில் ஏற்பட்ட ஆயிரம், ஆயிரம் மகிழ்ச்சி எல்லாராலும் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படம் நாகர்கோயிலில் எடுக்கப்பட்டது. புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் புகைப்படம்.
இவரது படம், டிஜிட்டல் மீடியாவில் வானவேடிக்கையாய் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்தது. முதல்வர் உள்ளிட்டோர் தங்களின் வலைதள பக்கங்களில் அந்த படத்தை பகிர்ந்து வைரலாக்கினர். கொண்டாடப்பட்ட அந்த போட்டோவை கிளிக் செய்த புகைப்பட கலைஞர் ஜாக்சனை சந்தித்தோம். பொதுவாகவே போட்டோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் பேசிய போது, ‛‛பத்திரிக்கை துறையில் காலெடுத்து வைக்கும் போது எனக்கு கேமராவே தூக்க தெரியாது. இல்ல, இல்ல கேமராவை தூக்க மட்டும் தான் தெரியும். அதனால் பலரிடம் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளேன். சென்னையில் பத்திரிக்கையாளராக சுற்றி வந்து கிட்ட,தட்ட 6 மாதங்களில் ஓரளவு கத்துக்கிட்டேன். பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து சொந்த ஊர் நாகர்கோயிலுக்கு பணி மாறுதலாகி வந்துவிட்டேன். சென்னை லைட் ஹவுஸ் மீது இருந்து நான் எடுத்த மின்னல் படம் எனக்கு நம்பிக்கையை தந்தது. அதனால் நாகர்கோயில் வந்து சிறிய பத்திரிக்கையில் வேலை செய்தாலும் மன நிறைவாக வேலை செய்தேன்.
பல்வேறு இடங்களில் புறக்கணிக்கப்பட்டேன். இவன் ஒரு டுபாக்கூர் போட்டா கிராபர் என்றெல்லாம் என்னை பேசியுள்ளனர். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை அதையெல்லாம் கடந்து தான் பணி செய்தேன். ஓகி புயலின் போது பிரதமர் வந்த சமயத்தில் சிறப்பான படங்கள் எடுத்து நான் வேலை செய்யும் ஏஜென்சி நிறுவனத்திற்கு கொடுத்தேன். அந்த படங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு முன்னணி பத்திரிக்கையில் வந்தது. அதனால் பலரால் பேசப்பட்டது. ஆனால் நான் தான் அந்த புகைப்படங்கள் எடுத்தேன் என வெளியே தெரியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு புகைப்பட கலைஞனுக்கு பணம், காசை விட அங்கீகாரம் தான் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தரும். இந்நிலையில் நேற்று நான் எடுத்து வெளியிட்ட படம் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டுள்ளது. பாட்டியின் சிரிப்பு என்னை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் என்னுடைய படங்களை பதிவு செய்தது அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் இந்த புகைப்பட துறைக்கு வர காரணமாக இருந்தவர் என்னுடைய மாமா ஹெல்த் இன்ஸ்பெக்டர் மதனுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன். அதே போல் தமிழ்நாடு பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலா ஐ.ஏ.எஸ், நாகர்கோயில் முதல் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சார் இப்படி பல்வேறு அதிகாரிகள் என்னை ஊக்கப் படுத்தியுள்ளனர். அதனால் சென்னையில் என்னுடைய போட்டோ கேலரி கண்காட்சி வைக்கும்போது நிகழ்ச்சியினை ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ் அவர்கள், மூலம் திறந்து வைத்து பெருமை கொண்டேன். சரவணன் சார் நாகர்கோவிலில் பணி செய்யும்போது அவரிடம் இருந்து பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு முகங்களையும் பாடங்களாக எடுத்துக் கொண்டு அதில் இருந்து என்னுடைய கலையை மேம்படுத்தினேன்.
கொரோனா முதல் அலையின் போது கொரோனா வார்டுகளுக்குள் சென்று புகைப்படம் எடுத்தது மிகப்பெரும் அனுபவம். அதே போல் நாகர்கோயிலில் முதல் முறையாக கொரோனா உடலை எரியூட்டும் போது மிக அருகில் சென்று புகைப்படம் எடுத்தது திக், திக் அனுபவம். அப்போது யாரும் கிட்ட வந்து படம் எடுக்கமாட்டாங்க. கொரோனா உயிர் பயத்தால் 400 மீட்டருக்கு அங்கிட்டே நின்றுகொள்வார்கள். அப்போதே என்னுடைய படங்கள் முக்கியமாக பேசப்பட்டது. சரவணக்குமார் சார் என்னை தற்காலிக மாநகராட்சி புகைப்பட கலைஞராக பணியில் அமர்த்தினார். அதனால் புகைப்படம் எடுக்க கூடுதல் பலம் கிடைத்தது. அவர் பணி மாறுதலால் சென்ற போது கை உடைந்தது போல இருந்தது. ஆனாலும் தற்போது அவர்களின் அன்பின் நிழலில் தான் இருக்கிறேன். பாட்டியின் புகைப்படம் பரவலாக பேசப்பட்டது என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -ABP நாடு Impact: மதுரை எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வந்தது!