GO 115 Tamil Nadu: அரசாணை 115; மனிதவள சீர்திருத்தக் குழுவையே கலையுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்
சமூகநீதிக்கு எதிரான செயல்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் அரசு அமைத்த மனிதவள சீர்திருத்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
![GO 115 Tamil Nadu: அரசாணை 115; மனிதவள சீர்திருத்தக் குழுவையே கலையுங்கள்- அன்புமணி வலியுறுத்தல் GO 115 TN PMK Anbumani Ramadoss Insist to Dissolve HR Reforms Committee as activities against social justice should not be allowed GO 115 Tamil Nadu: அரசாணை 115; மனிதவள சீர்திருத்தக் குழுவையே கலையுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/aba5fe12bd6d457be7b05bdbdc6dab7f1668067737122332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமூகநீதிக்கு எதிரான செயல்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் அரசு அமைத்த மனிதவள சீர்திருத்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
’’தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!
தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாகி விடாது. மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படுவதன் நோக்கம் நிரந்தர பணி நியமனங்களை நிறுத்தி விட்டு, தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்களை ஊக்குவிப்பது தான் என்றால் அந்த சமூக அநீதியை ஏற்க முடியாது.
நிரந்தரப் பணி நியமனங்களே தொடரும். தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 குறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், ''மனிதவள சீர்திருத்தக் குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் கவலையளிப்பதாக உள்ளது.
* பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்.
* அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள் / பதவிகள் / பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது
* பரந்துபட்ட முறையில் பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது ,
* தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது வெளிமுகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசுப் பணியிடங்களை அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது
* அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல்
* பணியாளர்கள் ஒப்பந்த முறையில் நியமித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அதன்பிறகு அவர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது.
ஆகிய ஆய்வு வரம்புகள் பணியாளர் விரோத நடவடிக்கை என்பதோடு, சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை'' என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் குறிப்பிட்டிருந்தது.
''தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம், சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையிலும் மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்திட வேண்டும்'' என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், அரசாணை (நிலை) எண் 115 குறித்த மனித வள சீர்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
முன்னதாக அரசாணை எண் 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)