ABP Exclusive: போர் சமயத்திலும் இத்தனை சிரமம் இல்லை! இலங்கையில் என்ன சிக்கல்? முன்னாள் தூதரக அதிகாரி நேர்காணல்!
"போர் சமயத்தில் கூட இலங்கை மக்கள் இவ்வளவு சிரமப்பட்டதில்லை. தற்போது ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் நிலை மனதிற்கு கவலை அளிக்கிறது"
இலங்கை யாழ்பாணத்திற்கான துணை தூதரக அதிகாரியாக பணியாற்றியவர் நடராஜன். தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இலங்கை பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக ஏபிபி நாடுவிற்கு நடராஜன் ப்ரத்யேக பேட்டியளித்தார்.
கேள்வி : ‘இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என்ன?’
பதில் : ’இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு சீனாவிடம் வாங்கிய கடன்களே முக்கியக் காரணம். இலங்கையில் நடந்த போருக்கு பின் இந்திய அரசு ஏராளமான திட்டங்களை வகுத்து சீரமைப்பு பணிகளை செய்துள்ளது. குறிப்பாக வீட்டு திட்டம், விவசாய திட்டம், மருத்துவம், மீனவர் நலன் உள்ளிட்ட உதவிகளை மில்லியன் கணக்கில் இலவசமாக செய்துள்ளது. ஆனால் சீனா உதவி செய்து இருந்தாலும், அதனை கடனாக கொடுத்துள்ளது. அதைத் தான் இலங்கை மக்களும் கூறுகின்றனர்.
கேள்வி : ’இலங்கை அரசு கடனுக்கு மேல் கடன் வாங்கியதை எப்படி பார்க்குறீர்கள்?’
பதில் : ‘இலங்கை மக்கள் கடின உழைப்பாளிகள். 21 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. அங்கு 6 ஆண்டுகள் பணிபுரிந்த அடிப்படையில் போதுமான வசதிகள் பொதுவாக உள்ளதை அறிந்துள்ளேன். இதற்கு முன்பு உணவு பஞ்சத்தை பார்த்ததில்லை. இலங்கை அரசு பணம் இருந்தால் திட்டங்களை செய்யலாம். ஆனால் கடன் வாங்கி மக்களை சந்தோஷப்படுத்த வேண்டுமா? போர் சமயத்தில் கூட இலங்கை மக்கள் இவ்வளவு சிரமப்பட்டதில்லை. தற்போது ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் நிலை மனதிற்கு கவலை அளிக்கிறது. இனி மேலாவது கடன் வாங்காமல் இருப்பது மக்களுக்கு நல்லது’.
கேள்வி : இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமா?
பதில் : ’இலங்கையில் இப்போதுள்ள அரசிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஏராளமான போராட்டங்கள் நடக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென போராட்டங்கள் நடக்கின்றன. புதிய அரசு நல்ல முறையில் நடத்துமென கூறுகின்றனர். ஆனால் இப்போது உள்ள நிலையில் யார் வந்தாலும் உடனடியாக பொருளாதார நெருக்கடியை சீரமைக்க முடியாது’.
கேள்வி : ’தமிழ்நாடு அரசின் உதவிகள் இலங்கை மக்களுக்கு பயனளிக்குமா?’
பதில் : ’தமிழக சட்ட சபை தீர்மானத்திற்கு இலங்கை மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். நானும் அதனை வரவேற்கிறேன். இது தக்க நேரத்தில் எடுத்த சரியான முடிவு. தமிழக அரசின் உதவிகளுக்கு வெளியுறத் துறை அனுமதி அளித்தால், இலங்கை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்’.
கேள்வி : ’ஒரு மாநில அரசு மற்றொரு நாட்டிற்கு உதவி செய்ய முடியுமா?’
பதில் : ‘வெளி விவகாரத்தை பொருத்தவரை மத்திய பட்டியலில் உள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே உதவி செய்ய முடியும்’.
கேள்வி : ‘மற்ற நாடுகளின் உதவி இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமா?’
பதில் : ‘இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது. ஒரு பில்லியன் யூ.எஸ். டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்யலாம். 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 4 இலட்சம் மெட்ரிக் டன் எரிபொருள், மக்களுக்கு உலர்ந்த உணவுகள் வழங்கியுள்ளது. எரிபொருள் வாங்க தனியாக 500 மில்லியன் யூ.எஸ். டாலர் கடனுதவி அளித்துள்ளது. இதேபோல மற்ற நாடுகளும் உதவி செய்யலாம். இலங்கை அரசு சர்வதேச நிதி மையத்தில் கடன் கேட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இவை இலங்கை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்’.
கேள்வி : ’இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியுமா?’
பதில் : ’இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒரிரு ஆண்டுகளில் சுமூக நிலைக்கு வருவது கேள்விக்குறி தான். மீண்டு வர நிறைய காலங்கள் எடுக்கலாம்’.