உங்கள் வாழ்வின் திருப்புமுனை எது? கோபிநாத்தின் கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் என்று போற்றப்படும் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நீண்ட நெடிய அரசியல் பயண வரலாற்றை கொண்டவர். அரசியல் தவிர இவர் எழுத்து,சினிமா திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதுவது என பல கலைகள் வித்தகராக இருந்தார். கருணாநிதியின் எழுத்து இன்றும் என்றும் பேசப்படும். அவருடைய பிறந்தநாளை திமுக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் ட்விட்டரில் '#HBDKalaignar98' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி பலர் ட்விட்டரில் தங்களது கருத்துகள் மற்றும் நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் ட்விட்டர் தளத்தில் பரம்பொருள் என்ற ட்விட்டர்வாசி ஒரு பதிவை செய்துள்ளார். அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கோபிநாத் பேட்டி எடுப்பது போன்ற காணொளியையும் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொளியில் கோபிநாத் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு கலைஞர் கருணாநிதி பதிலளித்துள்ளார். அதில் சில:
கே. உங்களுடைய வாழ்வில் திருப்பு முனை என்று எதை கருதுகிறீர்கள்?
ப. முதலில் தந்தை பெரியாரை சந்தித்தது. பின்னர் அறிஞர் அண்ணாவை சந்தித்தது. இந்த இரண்டும் தான் என்னுடைய அரசியில் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை.
கே. இலக்கியம் அரசியலுக்கு பாலமாக அமைந்ததா? அல்லது அரசியல் இலக்கியத்திற்கு பாலமாக அமைந்ததா?
ப. நான் ஒரு பாலத்தில் நடக்கும்போது எனது இரு பக்கங்களில் இருக்கும் கைப்பிடிகளை போல் எனக்கு அரசியல் ஒருபக்கமும், இலக்கியம் மறுபக்கமும் இருக்கும்.
கே. உங்களுடைய முதல் பொதுவாழ்வு பிரவேசம் அரசியலிலா? அல்லது இலக்கியத்திலா?
ப. என்னுடைய முதல் பொதுவாழ்வு பிரவேசம் சமூக பணிகளின் மூலம் நடந்தது. அதிலிருந்து வந்ததுதான் அரசியல் மற்றும் இலக்கியம்.
"ஒற்றுமை, இனப்பற்று, மொழிப்பற்று.. ". தலைவா @kalaignar89 🔥🔥🔥
— பரம்பொருள் (@paramporul) June 3, 2021
This man Gopinath... so blessed.. தோளில் கைபோட்டபடி தமிழ் நாடு. 😇😇😇 #HBDKalaignar98 pic.twitter.com/T0DPXVwbGd
கே. 83 வயதிலும் நீங்கள் எப்படி மாநில அரசு மத்திய அரசு, இலக்கியம், திரைக்கதை ஆகிய அனைத்தும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு மட்டும் ஒருநாளைக்கு 60 மணி நேரம் உண்டா?
ப. இருக்கின்ற நேரத்தை நான் வீணடிக்காமல் பயன்படுத்தி கொள்கிறேன். ஏனென்றால் ஓய்வு என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. ஓய்வு நேரத்திலும் உழைத்து கொண்டு இருக்கவேண்டும் என்று தான் நினைப்பேன். உழைப்பு, உழைப்பு அது தான் கருணாநிதியின் வெற்றிக்கு காரணம் மற்றும் அவரின் பொதுவாழ்வின் வெற்றிக்கு காரணம் என்று அண்ணா அவர்களே என்னுடைய பிறந்தநாள் விழாவில் கூறி பாராட்டியிருந்தார்.
கே. வாழ்க்கைக்கான தத்துவமாக நீங்களை எதை பார்க்கிறீர்கள்?
ப. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பது பொன்மொழி. ஆனால் வாழ்வதற்காக வாழ்க்கை இருக்கக்கூடாது. வாழு வாழவிடு என்பது போல்தான் இருக்க வேண்டும்.
கே. தமிழ் சமுதாயம் சிகரத்தை தொட என்ன செய்ய வேண்டும்?
ப. முதலில் ஒற்றுமை வேண்டும். பின்னர் இனப்பற்று மற்றும் மொழிப்பற்றும் வேண்டும். இவைகள் எல்லாம் இருக்கும்பட்சத்தில் தமிழ் சமுதாயம் சிகரத்தை தொடுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் அந்த காணொளியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக 1969-ஆம் ஆண்டு கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 45-ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். மொத்தமாக 18 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி