TN White Paper: தமிழ்நாட்டின் நிதிநிலை ; பயமாக உள்ளதாக -பிடிஆர் பேட்டி!
TN Govt White Paper: இந்த வெள்ளை அறிக்கை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து நழுவவதற்காகவோ, செயல்படுத்தாமல் போவதற்காகவோ அல்ல.
நிதி நிலையை பார்க்கும்போது தன்னால் இதை செய்ய முடியுமா என அவ்வப்போது அச்சம் வருகிறது என்று, வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்பு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் அமைச்சர் அளித்த பேட்டியில், “2006-11ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 8.62 சதவீதம் , தமிழ்நாட்டின் வளர்ச்சி 10.15 சதவீதம். வாங்கிய கடன்களுக்காக தமிழ்நாடு அரசு ஒருநாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது.
பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை, வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கே பலன் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மானியம் கொடுத்ததில் உரிய விவரங்கள் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்துறைக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ.1,200 கோடி ஆகும். முந்தைய ஆட்சிக்காலத்தில் ரூ.1 லட்சம் கோடி தவறான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “ 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,ஆக இருந்துவிட்டு, 3 மாதம் அமைச்சராக இருந்து ஆவணங்களை பார்த்தால் வியப்பாக உள்ளது. 5 ஆண்டுகளில் கொஞ்ச நஞ்ச தவறு ஏற்படவில்லை. சிஸ்டமே தவறாக உள்ளது. எனக்கே பயமாக உள்ளது. இதை சரி செய்ய முடியுமா என்கிற பயம். மக்களுடையே ஆதரவும், புரிதலும், ஒத்துழைப்பும் இருந்தால் இதை திருத்தி, முன்பு இருந்த தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டும் சாதிக்க முடியாது என்பதை நான் அறிவேன். முழுமையான புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் இந்த கனவை நினைவாக்க முடியும். எதை வேண்டுமானாலும் , எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வர தயாராக உள்ளோம். இந்த வெள்ளை அறிக்கை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து நழுவவதற்காகவோ, செயல்படுத்தாமல் போவதற்காகவோ அல்ல.
பல இடங்களில் ஊழல் அரசாங்கத்தின் உதவி உடன் நடைபெறுகிறது.75 ஆயிரம் கோடி வரை வருமானம் வரவில்லை. மானியங்கள் வழங்கும் முன்பே பாதியில் பலரிடம் போய்விட்டது. கொடுக்கும் போது மீதி போய்விட்டது. ஆண்டுக்கு 3 லட்சம் கோடி செலவு செய்கிறது. அதில் 16 சதவீதம் வீணாக செலவாகிறது. தமிழ்நாடு அதிகமாக 29 லட்சம் எக்டேர் நிலச் சொத்து கொண்ட மாநிலம். அதில் 2.05 லட்சம் எக்டேர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் 40 சதவீதம் கட்டடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடன் முதலீடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய் வாங்கினாலும் அதை அப்படியே முதலீடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய் வாங்கி 50 காசு மட்டுமே முதலீடு செய்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினால், அது அவரது தவறை அவரே ஒப்புக்கொண்டதாக அர்த்தம்.
கூட்டாட்சி முறைக்கும், மனித முறைக்கும் விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. நான் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. இன்றைக்கு வரும் வணிகவரியிலிருந்து பல்லாயிரம் கோடி வர வேண்டும். இது முதல் வெள்ளை அறிக்கை தான் கடைசி வெள்ளை அறிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவிற்கு நாங்கள் செயல்பட விரும்புகிறோம். அது சாியா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்” என்று கூறினார்.