‛அந்த வீடா இது... அத்தையின் கட்டில் கூட காணோம்... சசிகலா என்ன தான் செய்தார்?’ -ஜெ., வீட்டை கைப்பற்றிய தீபா பேட்டி!
‛இதுவரை சசிலா தரப்பு வந்து, நாங்கள் அத்தையை முறையாக தான் பார்த்தோம் என்று விளக்கவில்லை. இப்போது வரை அவர்கள் கட்சியை கைப்பற்ற தான் நினைக்கிறார்’ -தீபா
சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை , நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் அவரது தம்பி தீபக் வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நேற்று தனது கணவர் மாதவனுடன் அங்கு வந்த தீபா, வீட்டை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். இதோ அவர் அளித்த பேட்டி அப்படியே...
‛‛எனது அப்பா-அம்மாவும் திருமணத்திற்கு பின் இங்கு தான் வாழ்ந்தனர். அவர்களை வெளியே செல்ல வேண்டாம் என அத்தை கூறியிருந்தார். அதனால் இங்கு தங்கியிருந்தோம். அவர் முதல்வராக இருந்த போது, இங்கு வந்தால் ஒரு வித ஆரவாரம் இருக்கும். அவர் இல்லாமல், முதன்முறை இந்த வீட்டுக்கு வந்துள்ளேன். அது கொஞ்சம் வருத்தமாக உள்ளது. அவர் இறந்த போது, என்னை உள்ளே கூட அனுமதிக்கவில்லை. இரவு முழுவதும் இங்கே காத்திருந்தேன். இப்போது இங்கு நிற்கிறேன்.
வீட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. நான் குழந்தையாக இருந்த பருவத்தில் இருந்த இந்த வீட்டை பார்த்துள்ளேன். முக்கிய விழாக்களுக்கு வந்துள்ளேன். அந்த வீடு இப்போது இல்லை. அத்தையின் டேஸ்ட்க்கு இருந்த வீடு இப்போது இல்லை. அதிர்ச்சியாக உள்ளது. வீட்டின் உள்ளே ஒரு வித அழகும், அமைப்பும் இருக்கும். அது எல்லாம் மாயமாகிவிட்டது. இப்போது அது எதுவும் வீட்டில் இல்லை. அத்தை பயன்படுத்திய பொருட்கள் பல காணவில்லை. மாயமாக உள்ளது.
சசிகலா தான் அத்தைக்குப் பின் இந்த வீட்டில் இருந்துள்ளார். அவர் தான் வீட்டை மாற்றியிருக்கிறார். இப்போது இருக்கும் போயஸ் வீடு அத்தையின் வீடாக தெரியவில்லை. அத்தையை பார்க்க வருவோர், வீட்டின் உள்ளே சென்று பார்க்க முடியாது. வீடு உள்ளே எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியும். இப்போது அந்த மாதிரி தோற்றமே இல்லை.
வருமான வரித்துறை சோதனை நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போது எல்லா அறையும் திறந்து தான் உள்ளது. அத்தை வாழ்ந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை. முக்கியஸ்தர்களை அத்தை சந்தித்து பேசும் அறை அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் இன்று அந்த அறை தானா என்கிற சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா அறையில், அவர் பயன்படுத்திய கட்டில் கூட இல்லை.
கடைசி 10 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றம் வருமா என்கிற சந்தேகம் உள்ளது. அத்தை பெயரில் அறக்கட்டளை ஆக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த வீட்டை வைத்து அறக்கட்டளை நடத்த வேண்டும் என்று குறிப்பிடவில்லை. இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், வீட்டின் நிலை தற்போது அப்படி இல்லை. நிறைய பாழடைந்துள்ளது உள்ளது. ரிப்பேர் பணி நிறைய செய்ய வேண்டியுள்ளது. பராமரிப்பு பணிகள் செய்தாலே, நிறைய நேரம் எடுக்கும். இப்போது போய் தங்கும் நிலையில் வீடு இல்லை.
4 ஆண்டுகளாக வீட்டை பாலடைத்துள்ளனர். தற்போது எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இனி அதை பராமரிக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. மேல்முறையீடு தொடர்பாக அதிமுக தலைவர்களிடம் நான் போய் கேட்க முடியாது. மேல்முறையீடு செய்தால் அப்போது பார்க்கலாம். அத்தை இறப்பு குறித்த சந்தேகம், வீடு இருக்கும் நிலையை பார்த்து அதிகரிக்கிறது. சசிகலா குடும்பத்தினர், இந்த வீட்டில் என்ன தான் செய்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மீது சந்தேகம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை செய்யும் என நினைக்கிறேன். விசாரணையை முறையாக நடத்தி, அத்தை மரணம் குறித்து தெளிவு தர வேண்டும்.
வீட்டை பெறுவதில் காட்டிய ஆர்வத்தை, அத்தையின் மரணத்தில் இருந்த சந்தேகத்தை நீக்க அதிமுக தலைமை காட்டவில்லை. இதுவரை சசிலா தரப்பு வந்து, நாங்கள் அத்தையை முறையாக தான் பார்த்தோம் என்று விளக்கவில்லை. இப்போது வரை அவர்கள் கட்சியை கைப்பற்ற தான் நினைக்கிறார். நான் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை. எடுத்துச் செல்ல எதுவும் இல்லை. அத்தையின் போட்டோ கூட நான் தான் எடுத்து வந்தேன். வீடு உள்ளே இருந்த அவரது பல போட்டோக்கள் காணவில்லை,’’ என்றார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்