மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவாகும் - அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
சீமான் வீட்டின் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். இதுவரை பதில் அளிக்கவில்லை
கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்ட "சுதந்திர திருநாள் அமுத பெருவிழா"சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு அரசு துறைகளில் திட்டங்கள் தொடர்புடைய கண்காட்சி அரங்குகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டு தமிழக அரசின் கரூர் மாவட்டம் தொடர்பான ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார்கள்.
செய்தி மக்கள் தொடர்பு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பொது சுகாதாரத்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு, தோட்டக்கலை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தை வளர்ச்சி துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பாக தாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்பாக அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருந்ததை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒவ்வொன்றாக பார்வையிட்டார்கள். பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ரூ.16.52 இலட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், காதுகேளாத வாய்பேச முடியாத 6 நபர்களுக்கு பிரத்யோக தொலைபேசிகளையும் வழங்கினார். பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன எல்இடி வீடியோ வாகனத்தில் ஒளிபரப்பப்பட்ட தமிழக அரசின் சாதனைகளை பார்வையிட்டார்கள்.
பின்னர் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது- "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தற்போது இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்னகம் மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதில் 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விட்ட பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழகத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிக அளவில் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக செலவை குறைக்கும் வகையில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகைகளில் கிடைக்கப்பெறும் மின்உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது. சீமான் வீட்டின் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். இதுவரை பதில் அளிக்கவில்லை. மின் இணைப்பு எண் என்ன என்று சீமான் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி 4320 மெகாவாட். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி கூடுதலாக 6 ஆயிரத்து 220 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் , பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட நிமிர்ந்து நில் துணிந்து சொல் திட்டத்தில் இதுவரை 500 அழைப்புகள் வந்து உள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 200 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தொழில் வளத்தை மேம்படுத்துவதற்காக 200 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடத்தை தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய பேருந்துகள் கரூருக்கு வருகிறது என்று அறிவிப்புகள் மட்டுமே கண்டு வந்த நிலையில் தற்போது புதிய பேருந்து காண அறிவிப்பு வந்தவுடன் அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு பணிகள் முடிவுற்ற பின்பு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது" என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்கள்.