#2YrsofDravidianModel : ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக போர் தொடுத்த திமுக அரசு... தடைகளை தாண்டி சட்டம் கொண்டு வந்தது எப்படி?
அரசியல் ரீதியாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் திமுக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதே போக்குதான் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் சொன்னது, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
17 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். மற்ற விவகாரங்களை காட்டிலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் ரம்மியால் பல தற்கொலை சம்பவங்கள் நடந்த பிறகும், அதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தாமதித்தது மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
'இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்துவரும் இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அரசே ஏன் தடை செய்யக் கூடாது' என மாநில அரசை நோக்கி சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் பிரச்சினை தமிழ்நாட்டை உலுக்கு எடுத்தது.
உயிர்களை பறித்த ஆன்லைன் ரம்மி:
கடந்த மார்ச் 3ஆம் தேதி, சென்னையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் வினோத் குமார் என்பவர், தனது பணியில் இருந்து விடுப்பு எடுத்து, தனது தாயுடன் நேரத்தை செலவழித்துள்ளார். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு, பள்ளியில் இருந்து திரும்பும் தனது குழந்தைகளுக்கு உணவினை சமைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பின்னர், நடந்த சம்பவம்தான் நம் மனதையே உலுக்கும் வகையில் அமைந்தது.
சில மணி நேரங்கள் முன்பு வரை, தாயுடன் சிரித்து பேசி கொண்டிருந்த வினோத் குமாரை, இறந்த நிலையில் அவரது மனைவி பார்த்து கதறி அழுத சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கு எடுத்தது. வினோத்தின் தற்கொலை அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்தது.
அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தில், ஆன்லைன் ரம்மியால் எந்தளவுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்தது என்பது குறித்து வினோத் விளக்கியிருந்தார். ஆன்லைன் ரம்மி தன்னை பெரிய கடனில் தள்ளியதாகவும் தனது வாழ்க்கையை சீரழித்ததாகவும் குறிப்பிட்டுள்ள வினோத், மற்ற உயிர்களை காப்பாற்ற ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தற்கொலை கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
வினோத்தை போன்று பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதால் ஆன்லைன் சூதாட்டத்தின் எதிர்ப்பு குரல் தமிழ்நாட்டில் வலுக்க தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு கூறுகிறார்.
திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்:
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து, கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி அவசரச் சட்டத்தை இயற்றியது தமிழ்நாடு அரசு. கடந்தாண்டு அக்டோபர் 19ஆம் தேதி, அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 28ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருந்தது. அந்தக் குழு கடந்த ஆண்டு, ஜூன் 27ஆம் தேதி அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு இயற்றியது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளால், உயிரிழப்புகள் அதிகரித்துவந்ததால், மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க கோரிக்கைகள் வலுத்தன. 27 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 27ஆம் தேதி, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்ததுடன், டிசம்பர் 2ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வரைவு மீது சில கேள்விகளை எழுப்பிய ஆளுநர், கடந்த மார்ச் 8ஆம் தேதி மசோதாவை அரசுக்கே திருப்பியனுப்பினார்.
விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளும் பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தன. இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற சூழலில் அந்த மசோதா மற்றும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் என அனைத்தும் மாநில சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
அரசியல் ரீதியாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் திமுக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாதையில், மற்ற மாநிலங்களும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து மக்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.