சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji Bail: சிறையிலிருந்து வெளியே வந்ததும் முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Senthil Balaji's First Press Meet:
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்குடபட்ட புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். புழல் பகுதியில், செந்தில் பாலாஜியை வரவேற்க திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் மாதவரம் - ஆந்திரா சாலையில் போக்குவரத்தானது ஸ்தம்பித்தது.
செந்தில் பாலாஜி பேட்டி:
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி” என் மீது அன்பும் மரியாதை வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு , அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு . அதை நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து காட்டுவேன் என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், என் வாழ்நாள் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியுள்ளவனாக பணியாற்றுவேன் என்றும் உருக்கமாக தெரிவித்தார்.
அண்ணா - கலைஞர் நினைவிடங்களில் மரியாதை:
இதையடுத்து சிறையிலிருந்து காரில் கிளம்பிய செந்தில் பாலாஜி, நேராக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது , அங்கு பொன்முடி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அவரை வரவேற்றனர்.
அமைச்சராகுவரா.?
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவிக்கையில்,, “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், வாரத்தில் இரண்டு தினங்கள் - திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.
மேலும் அமைச்சராவதற்கு தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் திமுக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், அதில் அமைச்சராக செந்தில் பாலாஜியின் பெயரும் இருக்கும் என்றும், அதன் காரணமாகத்தான், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் என்று தகவல் பரவி வருகின்றன.