H Raja: "இந்திக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சாலையோர வேடிக்கை"- H. ராஜா
மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, இந்திக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், நேற்று (அக்டோபர் 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
”திசை திருப்பவே ஆர்ப்பாட்டம்”:
இந்நிலையில், திமுக போராட்டம் குறித்து பாஜக மூத்த தலைவர் H. ராஜா பேசியதாவது, கட சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதை திசை திருப்பவே, நேற்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
1964-65 ஆண்டுகளில் நடைபெற்ற, இந்திக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு இருந்தது. ஆனால், நேற்று இந்திக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சாலையோர வேடிக்கை. ஏனென்றால், திமுகவின் மொழிக் கொள்கை எவ்வளவு விரோதமானது, தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே ஆக்கியிருக்கின்ற சக்தி, திராவிட இயக்கங்கள். ஆனால், அதற்கு மாறாக பிரதமர் எங்கு போனாலும் தமிழ் பற்றிய பெருமைகளை எடுத்து கூறி வருகிறார்.
தமிழை பற்றிய பெருமைகளை உணர்ந்த பாஜகவை எதிர்ப்பதாக, மின்கட்டணத்தை மறைக்கவே திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அக்கொளையில் மாநில மொழிகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அதற்கடுத்து ஆங்கிலம் , மூன்றாவதாக இந்தியாவில் உள்ள ஏதாவது மொழிகளை கற்று கொள்ளலாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திமுகவின் தமிழ் வேஷம் கலைக்கப்படும் எனவும், திமுக போராட்டம் குறித்து பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார்.
திமுக ஆர்ப்பாட்டம்:
நேற்றை தினம் இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் ஆட்சி என்பது நீங்கள் நினைக்கும் எடப்பாடி ஆட்சி அல்ல , தளபதி மு.க ஸ்டாலின் ஆட்சி. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், நீங்கள் மீண்டும் இந்தி திணிப்பை கொண்டு வந்தால் , தளபதி அவர்களின் ஆணை பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம் என பேசினார்.
ஆர்ப்பாட்டம் குறித்து திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., தெரிவிக்கையில், அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரிமைப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமம். இந்தி திணிப்புக்கு எதிராக, 1965 ஆம் ஆண்டுக்கு முன்பே திமுக போராட்டம் நடத்தியது . மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை, இந்தி மொழி கட்டாயமாக்கப்படாது என நேரு உறுதியளித்தார்.
ஆனால் தற்போது முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலை வந்துவிடும் என தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில், மத்திய அரசின் தொடர்பு மொழியாக இந்தி வந்துவிடும் என தெரிவித்தார். இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது, தமிழ்நாடு மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாத சூழல் உருவாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில்,மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, இந்திக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார்.