Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்!
விஜய் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பதாக கடந்த பிப்ரவரியிலேயே பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவிற்கும் தடை விதிக்க கோரி நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட விஜய் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்திருப்பதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிவிட்டதோடு, தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போதே விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்
'அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்' என்பதே தற்போது இல்லை என எஸ். ஏ.சி. தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படும் இயக்கம், 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' ஆகும்.
இதற்கிடையே இதுகுறித்து தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட உள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்திலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு முன் நடந்த தேர்தலில் சில இடங்களில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளனர். தற்போது முதல்முறையாக விஜய் அவர்களின், பெயரை முன்னிறுத்தி போட்டியிட உள்ளதால், பலர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.