எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரில் சிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்? விரைவில் விசாரணை!?
அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் குறித்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் குறித்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பணிபுரிந்த நான்கு ஐஏஎஸ் அலுவலர்கள் உள்பட 12 அரசு அலுவலர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தமிழ்நாடு அரசின் அனுமதியை நாடியுள்ளது.
இந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஊழல் தடுப்பு அலுவலர்கள் கூறுகின்றனர். அனுமதி கோரிய கடிதம் கடந்த நவம்பர் மாதம் எழுதப்பட்டிருந்தாலும், தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், கவனிக்கத்தக்க வேண்டியது, இவர்களை விசாரிக்க அரசு இன்னும் அனுமதிதரவில்லை என்பதுதான்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவி 161இன் கீழும் 164 பிரிவின் கீழும் சந்தேக வளையத்தில் இருந்த மற்றவர்கள் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அலுவலர்களை விசாரிக்க வேண்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் சென்னை ஆணையர் ஜி. பிரகாஷ், முன்னாள் கோயம்புத்தார் ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் சந்தேக வளையத்தில் உள்ளனர். சென்னையின் முன்னாள் துணை ஆணையர்கள் கந்தசாமி, மதுசூதன் ரெட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர், முதன்மை தலைமை பொறியாளர் எம். புகழேந்தி, ஓய்வு பெற்ற சிஎச்ஒ செந்தில்நாதன் ஆகியோரை விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவினர் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.
அந்த கடிதத்தில், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161 மற்றும் 164இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், மேல் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலர்கள் சதி வேலையில் ஈடுபட்டு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இவர்களை கூடுதல் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க அனுமதி கோரியுள்ளோம்.
விசாரணையை முடித்து இந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. 2021 ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி முதல் 10 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13.6 கோடி ரூபாய் மதிப்பில் அம்பத்தூரில் சாலையை வலுப்படுத்தி, அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. கணிக்கப்பட்ட அளவிலிருந்து அதிகமான விலைக்கு ஏலம் விடப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்