![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Devar Jayanti: முத்துராமலிங்க தேவர் குருபூஜை..! முக்கிய தலைவர்கள் வருகை.. குவிக்கப்பட்ட போலீஸ்..!
தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
![Devar Jayanti: முத்துராமலிங்க தேவர் குருபூஜை..! முக்கிய தலைவர்கள் வருகை.. குவிக்கப்பட்ட போலீஸ்..! Devar jayanti festival 10,000 policemen engaged in security on occasion of Pasumbon Muthuramalinga Devar Gurupuja Devar Jayanti: முத்துராமலிங்க தேவர் குருபூஜை..! முக்கிய தலைவர்கள் வருகை.. குவிக்கப்பட்ட போலீஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/9b474aa6b17f9c4456bf21a4e628cc8f1667095532282571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இவர் தனது வாழ்நாளில் அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரமச்சார வாழ்க்கையையே வாழ்ந்தார். பசும்பொன்னில், தனது வீட்டில் உள்ள பூஜை அறையி்ல் தினசரி தேவர் நீண்ட நேரம் தியானத்திலும், பூஜையி்ல் ஈடுபட்டவர்.
சிறந்த ஆன்மிகவாதியும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும், அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது. தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30 ஆகும். எனவே ஆண்டு தோறும் அக்டோபர் 30ம் தேதி தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் மரியாதை:
முதலமைச்சர் முக ஸ்டாலின் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நிலை காரணமாக அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பசும்பொன் தேவர் நினைவிடத்திலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர். மேலும், தேவர் நினைவிடத்திற்கு அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர உள்ளனர்.
பாதுகாப்பு தீவிரம்
பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது என தென்மண்டல ஐ.ஜி தெரிவித்தார்.
இன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)