Pugar Petti: போதை ஆசாமிகளின் அட்டூழியம்: எப்போது பயன்பாட்டிற்கு வரும் மாநகராட்சி வாகனம் நிறுத்தம்!
ஐந்து தளங்களிலும் எங்கு பார்த்தாலும் பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மாத்திரை, மதுபானம், கஞ்சா என குவிந்து காட்சியளிக்கிறது.
சேலம் மாநகர காவல் துறை சார்பில் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 31 வது வார்டில் காவல்துறை - பொதுமக்கள் இடையேயான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. காவல் உதவி ஆணையாளர் ஹரி சங்கரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டவுன் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
அப்போது பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய உதவி ஆணையாளர் ஹரிசங்கரி, காவல்துறையினர் எவ்வளவுதான் கடமையை சரியாக செய்தாலும் அனைத்து பகுதியையும் கவர் செய்ய முடிவதில்லை. எனவே காவல்துறை பொதுமக்கள் இடையேயான நல்லுறவு மூலம் அனைத்து பகுதிகளையும் கவர் செய்ய முடியும் என்றார். மேலும் போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க காவல்துறை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
பெண்கள் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்ற செயல்களை யாரேனும் கண்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு தொடர்புடைய அலைபேசி எண்ணையும் வெளியிட்டார். மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் என உறுதியளித்த உதவி ஆணையாளர் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் நிவர்த்தி செய்யப்படுகிறதா என கண்காணிக்கப்படும் என்றார்.
மேலும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் விதவிதமாக அதிகரித்து வருவதால் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்க தெருவிற்கு 3 கண்காணிப்பு கேமிராக்கள் வீதம் பொறுத்தப்பட வேண்டும் என்ற உதவி ஆணையாளர் தற்போதைய சூழலில் பள்ளிகளிலும் தவறுகள் நடந்து வருவதால் பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது புகார்களை காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதில் ஒருவர், சேலம் ஆனந்தா பாலம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் இல்லாததால் இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்த அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர் என்றார். அதற்கு உடனடியாக காவல் உதவி ஆணையாளர், கட்டிடம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார்.
ஆனால் அங்கு சென்று பார்த்தபோது, கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஆசாமிகள் தங்களது கூடாரமாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். ஐந்து தளங்களிலும் எங்கு பார்த்தாலும் பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மாத்திரை, மதுபானம், கஞ்சா என குவிந்து காட்சியளிக்கிறது. அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட போதைப் பொருட்களின் சிரஞ்சி உள்ளிட்டவைகள் குவிந்து காட்சியளிக்கிறது. இது தொடர்பாக காவலராக பணியாற்றி வரும் கண்ணனிடம் கேட்டபோது, கொடுவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் அனைத்து இளைஞர்களும் போதை ஊசி, கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட பொருட்களை சரளமாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள முக்கிய இணைப்புகளின் ஒயர்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த அடுக்குமாடி வாகனம் நிறுத்தம் இடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.