விவேக் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: தமிழக அரசு
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பிற்கு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமல்ல என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் உடல்நிலையில் குறித்து தற்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், ரத்தக்குழாயில் 100 சதவிகித அடைப்பு இருந்ததன் காரணமாகவே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நலக் குறைவுக்கும் நேற்று அவர் போட்ட கொரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் விவேக்கிற்கு கொரோனாவிற்கான அறிகுறியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் சென்னை வடபழனியில் உள்ள SIMS மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில். 'நடிகர் விவேக் சுயநினைவற்ற நிலையில் காலை 11 மணிக்கு தங்களது மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தார் மூலம் அழைத்துவரப்பட்டதாகவும். அதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது ECMO சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு ரத்தக்குழாயில் ஏற்பட்ட 100 சதவிகித அடைப்பு மட்டுமே காரணம். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றபோதும் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்பது அவர் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.