TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்(TAPS) என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். இது, தேர்தலில் திமுகவின் பக்கம் எதிரொலிக்குமா.?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக, புதிதாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற திட்டத்தை முதலாமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். அதை அற்புதமான அறிவிப்பாக பார்க்கும் அரசு ஊழியர்கள், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வந்துள்ள இந்த அறிவிப்பு, திமுகவிற்கு கை கொடுக்குமா.?
கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதி
தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் அறிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சில நடைமுறை சிக்கல்களால் அந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. நான்கரை ஆண்டுக்கும் மேலான நிலையிலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கோரிக்கையை பிரதானமாக வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
முதலமைச்சரின் அறிவிப்பு தேர்தலில் கைகொடுக்குமா.?
இந்த நிலையில், தேர்தலில் நெருங்கி வருவதால், தமிழக அரசு இப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய TAPS திட்டத்தால், ஓய்வூதிய நிதியத்திற்கு, தமிழக அரசு கூடுதலாக 13,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழக அரசு ஆண்டுதோறும் 11,000 கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.
இதனால் அரசுக்கு கூடுதல் சுமை என்றாலும், வழக்கமாக சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்கு பெரும் பங்கு வகிப்பதால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, தேர்தலில் திமுகவிற்கு கைகொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.
இதனிடையே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த உடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர், அவருக்கு இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தனர். மேலும், எதிர்பார்த்ததை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததால் ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு, ஜனவரி 6-ம் தேதி அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர். ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு மூலம் லட்சக்கணக்கானோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்வு அளித்துள்ளார் என்று கூறியுள்ள அவர்கள், இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டத்தை அறிவித்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதை பார்க்கும்போது, வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆதரவு திமுகவிற்கு நிச்சயம் கிடைக்கும் என்று தெரிகிறது. அதனால், இந்த அறிவிப்பு, தேர்தலில் வாக்குகளாக மாற கூடுதல் பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.




















