Police Leave: தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை அனைவரும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், கடந்த 13ந் தேதி செப்டம்பர் 2021ல் நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும்போது, “ காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலா காவலர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையினர் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். இதனால், காவல்துறையில் சார்ந்த பலரும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடமும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதாகவும் பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பிற அரசுத்துறையினரைப் போல பணிவிடுப்பு, ஓய்வுகளை முறையாக வழங்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கீழ்நிலையில் பணியாற்றும் காவலர்கள் பலரும் தங்களது உயரதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு பணிகள் மட்டுமின்றி அவர்களது வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், சில உயரதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் பலரும் பணியாளர்கள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த சூழலில், காவல்துறையினருக்கு ஒருநாள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது காவல்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்